உலகம்
Typography

வியாழக்கிழமை நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் தமது நாட்டில் கடற்கரையோரப் பகுதிகளில் எண்ணெய் வளம் உள்ளதா என்று ஆராயும் அனைத்துப் பணிகளையும் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

பூச்சிய கார்பன் பொருளாதாரத்தை அடைவதன் ஒரு படியாகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை எனத் தனது முடிவை அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர் மாநாட்டில் விரிவாகத் தனது கருத்தை ஆர்டெர்ன் தெரிவிக்கையில், 'மாற்றங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தொடங்கியே ஆக வேண்டும். இதை விரைவாக இன்று நாம் முடிவெடுக்கா விடின் இது இன்னும் 30 வருடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் அதற்குள் எமது சமூகங்களை அதிர்ச்சியடையச் செய்யக் கூடிய காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான காலம் மிகவும் தள்ளிப் போய் விடும்.' என்றார்.

இந்த தடுப்பு நடவடிக்கை புதிய எண்ணெய் வளத் தேடுதல்களை மாத்திரமே பாதிக்கும் என்றும் ஏற்கனவே உள்ள எண்ணெய் ஆய்வு நிலையங்களையோ அல்லது டிரில்லிங் எனும் துளையிடல் நடவடிக்கைகளையோ பாதிக்காது என்றும் ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆர்டெர்ன் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சுத்தமான, பசுமை மிக்க நிலையான வருங்காலத்தை அமைப்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது இந்தக் கொள்கை எண்ணெய்த் திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களைப் பறிக்காது என்றும் ஆர்டெர்ன் கூறியுள்ளார். நியூசிலாந்தில் எண்ணெய் அகழ்வு திணைக்களத்தில் மொத்தம் 11 000 ஊழியர்கள் வேலை பார்ப்பதுடன் இவர்கள் ஆண்டுக்கு $1.8 பில்லியன் டாலர் பெறுமதியான எண்ணெய்யை அகழ்ந்து எடுக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்