உலகம்
Typography

தென்கொரியாவின் ப்யாங்சாங் நகரில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதில் வரலாற்றில் முதன் முறையாக நீல மற்றும் வெள்ளை நிறத்திலான ஒரே கொரியக் கொடியின் கீழ் இரு கொரிய தேசங்களும் கலந்து கொண்டதுடன் வட மற்றும் தென் கொரிய அரச அதிகாரிகளும் மிகவும் அரிதான நிகழ்வாகக் கை குலுக்கிக் கொண்டனர்.

முக்கியமாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் இன் சகோதரி கிம் ஜோ யொங் தென் கொரிய அதிபர் முன் ஜே இன்னை நேரில் சந்தித்துக் கை குலுக்கிக் கொண்டார். மேலும் இரு கொரிய தேசங்களின் விளையாட்டு வீரர்களும் ஒரே அணியாக அணிவகுத்துச் சென்றனர். இதற்கு முன்னதாக 2006 ஆம் ஆண்டு டுரினில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் 2000 ஆம் ஆண்டும் 2004 ஆம் ஆண்டும் சிட்னி மற்றும் அதென்ஸ் நகர ஒலிம்பிக் போட்டிகளில் அடையாள அணிவகுப்பையும் இவ்விரு கொரிய தேசங்களும் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வருட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோர் அருகருகே அமர்ந்து பார்வையிட்டதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இது தவிர ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உம் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

இதேவேளை தென்கொரியா இன்று இரவு அளிக்கும் விருந்துபசாரத்தில் வடகொரிய அதிபரின் சகோதரி பங்கேற்கும் போதிலும் அமெரிக்கத் துணை அதிபர் அதில் பங்கு கொள்ள மாட்டார் என்றும் தெரிய வருகின்றது.

Most Read