இன்று வெள்ளிக்கிழமை எகிப்து தலைநகருக்குத் தெற்கே பல சிறுவர்கள் அடங்கலாக கிறித்தவர்கள் பயணித்த பேருந்து ஒன்றின் மீது  3 ஜீப் வண்டிகளில் வந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 26  பேர் வரை பலியானதாகவும் 25 பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதா என்ற FBI புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ரட் குஷ்னர் உட்படுத்தப் பட்டுள்ளார். அண்மையில் இந்த விவகாரத்தை விசாரிக்க அமெரிக்க சட்டத் துறையால் FBI இன் முன்னால்  தலைவர் ராபர்ட் முல்லர் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகம் அருகே புதன்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 3 போலிசார் கொல்லப் பட்டும் 6 போலிசார் உட்பட 12 பேர் வரை படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் அமைந்துள்ள ஒரு செயற்கைத் தீவுக்கு அருகே அமெரிக்க அதிபர் டிரம்பின் Freedom of navigation என்ற ஆப்பரேஷனின் முதற் கட்டமாக அமெரிக்கா தனது கடற்படையின் போர்க் கப்பல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இது தமது இறையாண்மையை மீறிய செயல் என்றும் ஆத்திரமூட்டும் செயல் என்றும் சீன அரசு விமர்சித்துள்ளது.

 

அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் தற்போது ஈடுபட்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது அதிரடியாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். G7 நாடுகளுடனான மாநாடு ஆரம்பிக்க முன்னர் இன்று வெள்ளிக்கிழமை ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே இனை சந்தித்த டிரம்ப் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் வடகொரியாவுடன் அதிகரித்து வரும் பிரச்சினை தீர்க்கப் படக்  கூடிய ஒன்றே என்று தெரிவித்துள்ளார்.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று புதன்கிழமை கிட்டத்தட்ட 35 000 பொது மக்கள் ஒன்று கூடி அந்நாட்டு அதிபர் மைக்கேல் டெமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மீது சுமத்தப் பட்ட ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகின்றது.

பஹ்ரெயினில் நாட்டை விட்டு வெளியேற்றப் படவேண்டியவராக அரசால் கருதப் படும் முக்கியத்துவம் வாய்ந்த ஷியா பிரிவு மதகுருவான ஈஸா காஸ்ஸிம் என்பவர் வசிக்கும் நகரில் செவ்வாய்க்கிழமை போலிசார் ரெய்டு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் கொல்லப் பட்டும் கிட்டத்தட்ட 286 பேர் கைது செய்யப் பட்டும் உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

More Articles ...

Most Read