இலங்கை
Typography

“அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது தவறு. ஆகவே, அதனை செல்லுபடியற்றது என்று அறிவிக்க வேண்டும்.” என்று கோரி சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கடிதமொன்றை எழுதியுள்ளார். 

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தும் குழு மற்றும் அதன் அறிக்கைகள் என்பன அரசியலமைப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதன் செயற்பாடுகளை ஆரம்பம் முதல் செல்லுபடியற்றது என்று அறிவிக்குமாறும் கோரியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அடங்கலான சகல கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்களுக்கும் விஜயதாச ராஜபக்ஷவினால் நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எந்தவொரு அரசியல் கட்சியினதும் தலைவராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கவில்லை. அவர் அரசியல் கட்சியொன்றின் சார்பாக சாதாரண நபரொருவராகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அரசியலமைப்பு மாற்றங்களுக்கோ அல்லது சட்டத் திருத்தங்களுக்கோ ஆணைகோருவதற்கான உரிமை அவருக்கு கிடையாது.

தற்போதைய அரசியலமைப்பை இரத்து செய்வதற்கும் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்குமான நடைமுறையொன்றை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் இரண்டாவது அத்தியாயத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது.

சபைக்கு சமூகமளிக்காத உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மூன்றில் இரண்டுபெரும்பான்மை உறுப்பினர்களது ஆதரவுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப் படவேண்டும். அரசியலமைப்பின் 85வது உறுப்புரைக்கமைய சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமும் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

தற்போதைய ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனிநாடொன்றை உருவாக்குவதற்கு இலங்கைக்குள்ளோ அல்லது வெளியிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொருநபரும் ஆதரவளிக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ அல்லது பரிந்து பேசவோ கூடாது என்று அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் (21) திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தும் குழுவின் அறிக்கையின் சில முன்மொழிவுகள் நாட்டை பிளவுப்படுத்த வழிவகுக்கக் கூடும்.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி நான் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதாகக்க வேண்டும். இதற்கமைய, வழிநடத்தும் குழுவையும் அதன் அறிக்கைகளையும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் செல்லுபடியற்ற தென்றும் அறிவிக்க வேண்டும்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்