இலங்கை
Typography

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை கடந்த அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. அதாவது, பிரபாகரன் இறந்து விட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.” என்று மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

“தற்போது பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். அவர் 2020ற்குள் தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

யுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று எமது தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக எமது தலைவராக உருவாகியுள்ளார். தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ” என்றுள்ளார்.

Most Read