இலங்கை
Typography

வடக்கின் பொருளாதார வளங்களை இராணுவம் முடக்கி வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

வடக்கின் பொருளாதார வளங்களை முடக்கிக் கொண்டு நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், வேலையற்ற பட்டதாரிகள் என பலரின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய வேலைத்திட்டங்கள் பல இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் எவ்வாறு பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவஞானம் சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்தவெற்றி மமதையுடன் இருந்தவர்கள் அதிலிருந்து கீழிறங்கி இனக்குழுவொன்றை முடக்கும் வகையில் நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரவு-செலவுத் திட்டத்தில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

வடக்கிலுள்ள விவசாயப் பண்ணைகளில், முழங்காவிலில் 1900 ஏக்கர் முந்திரிகை பண்ணை, முக்கொம்பனில் 110 ஏக்கர் பண்ணை, வடக்கச்சியில் உள்ள 400ஏக்கர் பண்ணை, ஜெயபுரத்தில் உள்ள 80 ஏக்கர் பண்ணை, மலையாளபுரத்தில் உள்ள 78 ஏக்கர் பண்ணை, முல்லைத்தீவில் 200 ஏக்கர் பண்ணை, வட்டுவாகலில் 680 ஏக்கர் கோத்தபாய பண்ணை, மன்னாரில் 1910 மற்றும் 1500ஏக்கர்களைக் கொண்ட இரண்டு பண்ணைகள் என அனைத்ததையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. சிவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இவை இயங்குகின்றன.

வடக்கில் பட்டதாரிகள், முன்னாள் போராளிகள், க.பொ.த, சாதாரண, உயர்தரத்துடன் உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். இத்தனை விடயங்களையும் முன்னெடுத்திருந்தால், அவர்கள் தமது ஜீவனோபாயத்தினை மேற்கொள்ளும் வகையிலான வருமானத்தினை பெற்றுக்கொண்டிருப்பர்.

தமிழ் மக்களுக்கு இரும்புக்கூடுகள் வேண்டாம் என்று நாம் எதிர்த்தோம். அதன் பலனாக 50 ஆயிரம் கல்வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்து தற்போது வரவு- செலவுத் திட்டத்திலும் உள்வாங்கியுள்ளது. இதனை நாம் சாதகமாக பார்க்கின்றபோதும் அதில் வரையொன்றைச் செய்திருக்கின்றது. குறிப்பாக செங்கற்கள், ஓடுகள் மூலம் அந்த வீடுகள் நிர்மாணிக்கப்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்