இலங்கை
Typography

வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரி தீர்வினைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அப்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் பற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சரவையில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபித்ததையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இதுபற்றிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இந்த விவகாரம் பற்றி ஜனாதிபதியிடம் விளக்கி கூறினேன்.

இந்த வழக்கின் சாட்சிகள், வவுனியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை காட்டியுள்ளனர். இதை காரணமாக கொண்டே வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன். சட்டமா அதிபர் திணைக்களத்தின் இந்த முடிவு நியாயமானது அல்ல. சாட்சிகளின் தேவையை கருதி வழக்குகள் இடம் மாற்றப்படுவது ஏற்புடையதல்ல.

இன்று யுத்தம் முடிந்த நிலையில் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எவரும் சென்று வரக்கூடிய நிலையில், சட்டமாஅதிபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது தமிழ் மக்களுக்கு தவறான செய்தியை தருகிறது.

இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, இதுபற்றி தான் அறியவில்லை என்றும், சாட்சிகளின் தேவையை கருதி வழக்குகள் இடம் மாற்றப்படுவது ஏற்புடையதல்ல என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். இதுபற்றி தான் சட்டமாஅதிபரிடம் விளக்கம் கோரி தீர்வு காண்பதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்துள்ளார்.

இதுபற்றிய கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் எழுதியுள்ளதாக, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இச் சமயத்தில் கூறினார்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்