இலங்கை
Typography

இலங்கைக்கு எதிரான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமையானது, சர்வதேசத்தின் அதிகார எல்லைக்கான அவசியத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். 

அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 36வது அமர்வு ஜெனீவா நகரில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை பற்றி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட 40 நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் பற்றியும் உயர்ஸ்தானிகர் தனது ஆரம்ப உரையில் பிரஸ்த்தாபித்திருந்தார்.

"காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு நான் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன், பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் இழுபட்டுவரும் வழக்குகளை துரிதப்படுத்தல் உள்ளிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஏனைய முன்னெடுப்புக்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு அமைய புதிய சட்டமொன்றைக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைக்கின்றேன்" என்றும் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் மறுசீரமைப்பு செயற்பாடுகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றம் புலப்படுகிறது. 30/1 பிரேரணையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை ஊக்குவிக்கின்றேன். தெளிவான கால எல்லை மற்றும் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையை சமாதானப்படுத்தும் செயற்பாடாக (box-ticking exercise) இருக்கக் கூடாது. மாறாக சகல மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமானது. இலங்கைக்கு எதிரான சர்வதேச மனித உரிமை சட்டமீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமையானது, சர்வதேசத்தின் அதிகார எல்லைக்கான அவசியத்தை மேலும் அதிகரிக்கும்" எனவும் சையத் அல் ஹூசைன் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்