இலங்கை
Typography

மேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்கிற போதிலும், நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கடிமான பணிக்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அந்த சவாலை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலவை விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மகாவலி எச் வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “என்னதான் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டபோதும் எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத பணிகளை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நிறைவேற்றியுள்ளது.

விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, அதன்மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மொரகஹகந்த திட்டத்தின் கீழ் முன்னைய அரசர்களின் காலத்திற்கு பின்னர் அதிக எண்ணிக்கையான குளங்கள் இப்போது ஒரேயடியாக நாட்டில் புனர்நிர்மானம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் இப்பிரதேச விவசாய சமூகத்தின் வாழ்க்கை சுபீட்சம் அடையும்.

இதுவரை எந்தவொரு அரசாங்கத்திடம் இருந்தும் தீர்வு கிடைக்காத குப்பை பிரச்சினைக்கு இந்த நாட்டில் இதற்கு பின்னர் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் அதற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லாத வகையில் நிலையானதொரு தீர்வை அரசாங்கம் அடுத்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தும். வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றில் தயாரிக்கப்படும் கூட்டு உரம் விவசாய சமூகத்திற்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

Most Read