இலங்கை
Typography

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில் குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் இருவரும் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று தான் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்தப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று திங்கட்கிழமை எழுதியுள்ள கடிதமொன்றிலேயே முதலமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சரினால் கடந்த ஆண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த மாதம் தன்னுடைய அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்தது.

அந்த அறிக்கையில், அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகியோர் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும், அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Most Read