இலங்கை
Typography

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எனக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதமொன்றை எழுதியிருக்கின்றேன். அந்தக் கடிதத்துக்கு அவர் அளிக்கும் மறுமொழியை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கூட்டமைப்பின் தலைவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில், விசாரணையில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தியிருந்தார். அத்தோடு, அவர்கள் மீதான மீள் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சம்பந்தனுக்கு கடிதமொன்றை எழுதியிருக்கின்றேன். அந்தக் கடிதத்துக்கான பதில் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும். அந்தக் கடிதத்துக்கு பதில் இல்லாமல் எதுவும் சொல்ல முடியாது. அமைச்சர்கள் பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர், தாம் அமைச்சர்களாக பதவி வகிக்கும் காலத்தில் அவர்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தலையிட மாட்டார்கள் என்று எழுத்து மூல உத்தரவாதம் அளித்தால், அதனை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்