இலங்கை
Typography

“அரசாங்கத்திடம் நான் எதையும் கேட்டுப்பெற்றதில்லை. ஆயினும் என்னைப் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட வீடு தொடர்பில் அரச தரப்பிலிருந்தும் கூட சிலர் தவறான கூற்றுக்களை முன்வைத்து வருவதாகவும் குறிப்பிட்ட இரா.சம்பந்தன், அது சிறந்ததல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் அரசியல் மாற்றங்களின் போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக நான் உபயோகித்த அரசாங்கத்தின் வளங்களை கையளித்துவிட்டேன்.

எனது உத்தியோகபூர்வ வீட்டை மத்திரமே நான் பெற்றுக்கொண்டேன். அரசாங்கத்திலேயே அது எனக்கு தரப்பட்டது. எனினும் அது தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நான் இதற்கு முன்னர் ‘சமிட்’ தொடர்மாடியிலேயே வசித்து வந்தேன். எனக்கு 80 வயதாகும் நிலையில் எனது உடல் நிலை காரணமாகவும் அங்கு படிக்கட்டுகளில் ஏறிச் செல்வதென்பது முடியாததாலுமே அந்த உத்தியோகபூர்வ இல்லத்தைப் பெற்றுக் கொண்டேன்.

2015இல் நான் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றபோதும் 2017ஆம் ஆண்டே எனக்கு அந்த இல்லம் வழங்கப்பட்டது. அதனை 2019இல் நான் மீள திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் அதனை மீளக்கோரவில்லை. எனினும் அரசாங்கமே அதனை எனக்கு வழங்கியது. எனக்கு வழங்கப்பட்ட கார் ஒன்றையும் நான் இரண்டு வருடத்தில் மீள வழங்கினேன். இதிலிருந்து எனது நேர்மை வெளிப்படும்.” என்றுள்ளார்.

இதனிடையே, இரா.சம்பந்தன் தற்போது வசித்து வரும் வீட்டிலேயே அவர் தொடர்ந்தும் வசிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்