இலங்கை
Typography

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் அவரது மருமகனின் நிறுவனத்திற்கு இடையில் பிணைமுறிகள் கொடுக்கல் வாங்கலின் போது, நலன்களுக்கு இடையிலான முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் நேற்று புதன்கிழமை தீர்மானித்தார். அடிக்குறிப்பு இன்றி 5 பாகங்களாக தடயவியல் கணக்காய்வு அறிக்கை தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இறுவெட்டுக்களில் வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் மகேந்திரனின் மருமகனுக்கு சொந்தமான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன இரகசியமான முக்கிய தகவல்களை அர்ஜூன மகேந்திரனின் உத்தியோகப்பூர்வ மின்னஞ்சலுக்கு நான்கு சந்தர்ப்பங்களில் அனுப்பியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சர்ச்சைக்குரிய இரண்டு முறிகள் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெற்றதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி அனுப்பிய மின்னஞ்சல் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் நிறைவடைந்துள்ளதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தன்னால் அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால், அதுகுறித்து கவலை அடைவதாக கசுன் பாலிசேன இந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு இந்த காலவரையறையில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் மூலம் 96 வீத சிறந்த பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரங்கப்படுத்தப்படாத விலை தொடர்பில் முக்கிய தகவல்கள் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் கசுன் பாலிசேனவிற்கு அர்ஜூன மகேந்திரன் அனுப்பியுள்ளதாக இந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப வசனங்களை ஆராயும் போது அறிய முடிவதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கசுன் பாலிசேன தனக்கு கிடைத்த உதவியை மின்னஞ்சல் மூலம் பாராட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் அர்ஜூன மகேந்திரன், மத்திய வங்கியுடன் தொடர்புபடாத விடயங்கள் தொடர்பில் உறவுகளைப் பேணியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்த போது, அவரது சகோதரியான ஷிரோமி நொயல் விக்ரமசிங்க பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் என்ற பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் தாய் நிறுவனத்தின் முக்கிய பதவியொன்றை வகித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த காலத்திற்குள் நலன்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்