இலங்கை
Typography

கடந்த காலத்தில் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானங்களை புதிய அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை ஐக்கிய நாடுகளில் சமர்ப்பித்துள்ள மேற்படி தீர்மானங்களில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்க முடியாதெனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், திருத்தமின்றி அந்த தீர்மானங்களை முழுமையாக அரசாங்கம் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அரசாங்கம் நீதித்துறையையும் பொலிஸ் துறையையும் எவ்வாறு நடத்தியுள்ளது. எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும் போது பெரும் கவலையாக உள்ளது. இதனால் நீதித்துறை பெரும் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அவசியம் கிடையாது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பல விடயங்கள் வெளிவரவுள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS