இலங்கை
Typography

“சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும். எச்சந்தர்ப்பத்திலும் அதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.” என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது, தேசிய கீதத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவது தொடர்பில் அமைச்சரவையிலோ, அரசிலோ எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடன உரை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களின் வாக்குப்பலத்திலும், தமிழ் மக்களுக்கு மட்டற்ற வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அவர்களை ஏமாற்றி ஆழ்ந்த மயக்கத்தில் வைத்திருந்தோரின் முண்டு கொடுப்பிலும், கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்து கொண்டிருந்த நல்லாட்சி என்ற நாடகம் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுத்தந்துவிடாமல் முடிவிற்கு வந்திருக்கிறது. இன்று சிங்கள சகோதர மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் உருவான அரசொன்று ஆட்சிக்கு வந்திருக்கிறது.

இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை என்ற நிலையிலும் ஒட்டு மொத்த இலங்கைத்தீவிற்கு மட்டுமன்றி, தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதியாக இருப்பேன் என தனது பதவியேற்பு நிகழ்வில் உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ் மக்களின் தேசிய நல்லிணக்க அடையாளமாகவே நான் இந்த ஆட்சியில் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்து வருகின்றேன். தமிழ் மக்களின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தும் சுயலாப தமிழ் கட்சிகளின் தவறான வழி நடத்தலை எண்ணி தமிழ் மக்களை இந்த அரசு ஒரு போதும் வஞ்சித்து விடாது என்றே நான் நம்புகிறேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS