இலங்கை
Typography

நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருப்பது அவர்களுடைய சரியான முடிவு என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் வேட்பாளர் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னரிமை அளிப்பவராக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “சகல விடயங்களையும் மறந்துவிட்டு தற்பொழுது ஜனாதிபதி வேட்பாளர் பற்றியே பலரும் கலந்துரையாடுகின்றனர். எனினும், நாட்டின் பாதுகாப்பு பற்றியே மக்களின் அதிகமான அக்கறையுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலை அடிப்படையாக வைத்து பொதுஜன பெரமுனை தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவுசெய்துள்ளது. அவர்களின் முடிவு சரியானதாக அமைந்துள்ளது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது இன்னமும் உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கப்படவில்லை. எனினும் ஒருவர் தன்னைத் தானே வேட்பாளர் எனக் கூறி வருகின்றார். இது குறித்து கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னர் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக வாக்களிக்க முன்னர் தொலைநோக்குப் பார்வையொன்று வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். அண்மைய நாட்களில் இரண்டு கூட்டங்களை நாம் பார்த்திருந்தோம். இதில் உரையாற்றிய இரு நபர்களும் ஏற்கனவே கடந்தகால தேர்தல்களில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகளையே முன்வைத்துள்ளனர்.

நாட்டை அபிவிருத்தி செய்வது என்பது ஒரேநாளில் செய்துவிடக் கூடிய விடயமல்ல. அது மாத்திரமன்றி வேட்பாளர்களாக இருப்பவர்களுக்கு ஒழுக்கமொன்று இருக்க வேண்டும். இந்த இரண்டு கூட்டங்களும் கலந்துகொண்ட பிரதான நபர்களின் ஆடைகளைப் பார்த்தாலே அவர்களின் ஒழுக்கம் புரியும். நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் மக்களுக்கு முன்னுதாரணமானவராக இருக்க வேண்டும்.

வீடுகளைக் கட்டுக்கொடுத்தார் என்பதற்காக அவரை ஜனாதிபதியாக்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கே அதிக பணம் செலவிடப்படுகிறது. அதனடிப்படையில் பார்த்தால் கல்வி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட வேண்டும். அபிவிருத்தியென்ற பெயரில் பொது மக்களின் பணம் விளம்பரங்களுக்காக செலவுசெய்யப்படுகிறது.

தந்தையைப் போன்று சேவை செய்யப்போவதாக ஒருவர் கூறுகின்றார். அவருடைய தந்தையின் காலத்திலேயே எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆயுதம் வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரை அனுப்புவதற்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டபோதும் பின்னர் அவற்றைப் பயன்படுத்தியே எல்.ரி.ரி.ஈயினர் எம்முடன் யுத்தம் புரிந்தனர். அவருடைய தந்தையே 600 பொலிஸாரை எல்.ரி.ரி.ஈயினரிடம் சரணமடையுமாறு ஆலோசனை வழங்கினார். அவ்வாறு சரணடைந்த பொலிஸாரைக் கொன்றுகுவித்த கருணா அம்மான், கோட்டாபய ராஜபக்ஷவின் மேடையில் முன்வரிசையில் அமர்ந்துள்ளார். தந்தை செய்ததை தானும் செய்யப்போனால் அது மோசமானதாக அமைந்துவிடும்.

பாதுகாப்புத் தொடர்பில் அனுபவம் வாய்ந்த ஒருவராக நான் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றேன். கட்சித் தலைமை என்னை வேட்பாளராகத் தீர்மானிக்குமாயின் அதனை ஏற்றுக் கொள்ளவும் தயாராகவிருக்கின்றேன். எதுவாகவிருந்தாலும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆதரவளிக்குமளவுக்கு தான் வங்குரோத்து நிலைக்கு வரவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்