இலங்கை
Typography

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் புரிந்த பாவச் செயல்களுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் மன்னிப்புக் கோரவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் அச்சம், பயம் இல்லாத பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்பப்போவதாக உறுதியளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது இடம்பெற்ற அனைத்து பாவச் செயல்களுக்கும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிவிட்டுத்தான் வந்திருக்கிறாரா? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுயாதீனமான நீதிமன்ற செயற்பாடுகள், தகவல் அறியும் உரிமையை உறுப்படுத்தி, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து, காணாமற்போனோருக்கான அலுவலகம் திறந்து வைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நேற்றைய தினம் அறிமுகமானவர் நாம் பெற்றுக்கொடுத்திருக்கும் சுதந்திரத்தை அழிக்க வந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகச் சிலர் வார்த்தைகளால் கூறினாலும், உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்தியது யார் என்பதை நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரணால ஜல்தர பிரதேசத்தில் 'கிறீன் வெலி ரெசிடென்சி்' எனும் நடுத்தர வர்க்கத்தினருக்குரிய வீடமைப்புத் திட்டத்தை நேற்று திங்கட்கிழமை காலை திறந்து வைத்த பிரதமர் விக்ரமசிங்க உரையாற்றுகையிலேயே மேற்படி கேள்வியை முன்வைத்தார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் நேற்று இவ்வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார்.

கொலைகள், கடத்தல்கள், ரத்துபஸ்வெல போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என்ற ரீதியிலா கோட்டாபய ராஜபக்ஷ இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகின்றார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ரவிராஜ், சிவராம், லசந்த விக்கிரமதுங்க மற்றும் தாஜூதீன் படுகொலை, எக்னலிகொடவை கடத்தி காணாமலாக்கியமை, ஊடகவியலாளர் கீத் நொயர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் உப்பாலி தென்னகோனை தாக்கியமை, சிரச மற்றும் உதயன் ஆகிய ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, குடிப்பதற்குத் தூய நீர் கோரிய ரத்துபஸ்வெல மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை, வெலிக்கடை சிறைக்கைதிகளை கொலை செய்தமை, வெள்ளை வேன் கொண்டு கடத்தியமை, முன்னாள் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமை என்பன ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மிகக் கொடூரமானதும் பாரதூரமானதுமான குற்றச் செயல்களாகும். இதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

பிரதேச சபை தலைவரொருவரால் பெண் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் பிரதேச சபைத் தலைவர் ஒருவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில் வாழும் சேரி குடியிருப்பாளர்களைப் பலவந்தமாக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து நீக்கியமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுஜன பெரமுன வேட்பாளர் மன்னிப்பு கோருவாரா?.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்