இலங்கை
Typography

அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 

குழப்பம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸ், பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரையும் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் என்பவற்றை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு பிரிவினருக்கு நான் வழங்கியுள்ளேன்.

அதனால், அமைதியை நிலை நாட்டுவதற்கு பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சர்வதேச பயங்கரவாதத்தினால் உயிர்த்த ஞாயிறன்று மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள். அதேநேரம், பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நிலைமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் அமைதி குலைந்து இனவாதப் பிரச்சினை ஏற்படும் போது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். நாட்டின் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டால் அதன் பலனாக வெசாக் நிகழ்வுகள் பாதிக்கப்படும்.

வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் சில அணியினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்கள். தற்போது பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் பல இடங்களில கலவரத்தை ஏற்படுத்த இந்த அணியினர் முயற்சி செய்கின்றார்கள். இச் சந்தர்ப்பத்தில் கலவரத்தை ஏற்படுத்துவதன் நோக்கம் பொலிஸாரையும் பாதுகாப்பு படையினரையும் சங்கடத்திற்குள்ளாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து நாட்டை நிலையற்றதாக்குவதாகும். அதனால் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்தது. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்கள்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்