இலங்கை
Typography

“எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை கூட்டு எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றால், கோட்டாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும்.” என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷ குறித்து இன்று அதிகமாக பேசப்படுகின்றது. அவர் ஒரு அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட நபர். இரண்டு நாடுகளின் பிரஜாவுரிமை கொண்ட நபர் ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு வந்தால் இங்கு போட்டியிட முடியும். ஆனால் அமெரிக்க குடியுரிமையை பெற்றுக்கொள்வது சாதாரண விடயம் அல்ல. அதேபோல் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவதும் கடினமான விடயமாகும்.

அதேபோல் 19ஆம் திருத்தம் வந்துவிட்டது. இப்போது இரட்டை பிரஜாவுரிமை நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை உள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும். எமக்கும் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியில் தான் ஒரு பெறுமதி இருக்கும்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எமது வேட்பாளரை நாம் தெரிவுசெய்து விட்டோம். ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் அனைவரும் இந்த வேட்பாளருக்கு ஆதரவையும் தெரிவித்துவிட்டோம். ஐக்கிய தேசிய கட்சியின் பலமான ஒருவரே அவர். அவர் பொது அணியின் சார்பில் களமிறங்கவுள்ளார். நிச்சயமாக வெற்றிபெறும் தூய்மையான வேட்பாளரே அவர். வெகு விரைவில் அவரை அறியப்படுதுவோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்