இலங்கை
Typography

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “எந்த தீர்மானத்திலும் காலக்கெடு இலங்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வளவு காலத்துக்குள் இங்கே இந்த தீர்மானத்திலே இலங்கை தான் பொறுப்பெடுத்த விடயங்களை நிறைவேற்றுகின்ற போது அதனை மேற்பார்வை செய்வதற்கும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் உந்தி தள்ளுவதற்குமான பொறிமுறை தான் இந்த தீர்மானம். ஆகவே தான் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இப்போது முன்வைத்திருக்கின்ற தீர்மான வரைபே எம்மை பொறுத்த வரையில் போதாது. இது இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அதனை திருத்துவதற்கான பிரேரணையை கொண்டு வந்தால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறது. பத்து வருடங்களாக நாம் சொல்லிவருகின்ற ஒரு கூற்று உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதாகும். அந்த உண்மையின் அடிப்படையிலேயே நீதி செய்யப்படவேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS