இலங்கை
Typography

“புதிய அரசியலமைப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியினரும் விகாரை விகாரையாகச் சென்று போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இனவாதத்தைத் தூண்டவேண்டாம் என்றும் குரோதத்தை விதைக்க வேண்டாமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் கூறினார். ஆனால், மஹிந்தவும் அவரது சகாக்களுமே, விகாரை விகாரையாகச் சென்று, மக்களைக் குழப்பும் வகையில் இனவாதக் கோணத்தில் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏப்ரல் மாதத்துக்குள் நாடு பிளவுபடும், சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும், 09 பொலிஸ் நிலையங்கள் உருவாகும் என்றெல்லாம், மஹிந்த தரப்பினர் அறிவிப்புகளை விடுத்து வருகின்றனர். 10 வருடங்கள் ஜனாதிபதிப் பதவியை வகித்த ஒருவர் கூட, புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலி கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.

கிராமமொன்றுக்குச் சென்று பொய்யுரைத்தால் கூட பரவாயில்லை. ஆனால், விகாரை விகாரையாகச் சென்று, வழிபாடுகளில் ஈடுபட்டு – பிரித் நூல்களை கட்டியப்படி, புத்தபெருமானின் முன்னிலையிலேயே பொய்யுரைக்கின்றனர். இது தகுமா? புதிய அரசியலமைப்பு ஊடாக, நாடு பிளவுபடாது. அதற்கு ஜே.வி.பி. இடமும் அளிக்காது.

அரசியலமைப்பு யோசனைக்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அதன்பிறகு ஓர் அடியேனும் முன்வைக்க முடியாது. எனவே, வீண் பரப்புரைகளை முன்வைக்க வேண்டாம்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS