இலங்கை
Typography

“புதிய அரசியலமைப்பினை ஏற்க முடியுமா, இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறான நிலையில், அரசியலமைப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே, பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற அமர்வில், புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு, அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும். மக்களை ஒன்றிணைத்தல், அதிகாரப் பரவலாக்கல் போன்ற பல நன்மைகள், புதிய அரசியலமைப்பில் உண்டு. தலைநகரில் அதிகாரம் குவிந்துள்ளதால், அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது. எனவே, மாகாண மற்றும் பிரதேச ரீதியில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தில், மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர், மக்கள் கருத்துக்கணிப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால், பொதுத் தேர்தல் அவசியமில்லை. அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களும் தீர்மானிக்கட்டும். அதற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை.

புதிய அரசியலமைப்பு, நாட்டுக்கு ஆபத்தானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில், இது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தை, தவறான வகையில் தூக்கிப்பிடித்து, சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ அணியினரே, நீங்கள் தேசப்பற்றாளர்களாக நடிக்க வேண்டாம். நீங்கள் போலியான தேசப்பற்றாளர்கள். நீங்கள் படுமோசமானவர்கள். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டுகின்றீர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுக்க பல சர்வதேச நாடுகள் உதவின. இந்தியா உள்ளிட்ட அந்த நாடுகளிடம், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவோம் எனவும் தேசிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வைக் காண்போம் எனவும், நீங்கள் வாக்குறுதியளித்தீர்கள்.

தற்போதைய சூழ்நிலையில், புதிய அரசியலமைப்பு, நாட்டுக்கு மிகவும் அவசியம். இதனூடாக, மூவின மக்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும், சம உரிமையுடனும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனும் வாழமுடியும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS