இலங்கை
Typography

“ரணில் விக்ரமசிங்க நாட்டையும் என்னையும் நாசமாக்கினார். எனவே, அவரை இனி ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு ஏழு நாட்களுக்குள் தீர்வினைக் காண்பேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி என்னை ஆட்சியில் அமர்த்திய 62 இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இன்றும் நான் எனது சிரம் தாழ்த்தி மதிக்கின்றேன். நான் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி எடுத்த முடிவு அன்றைய தினத்தை விட இன்று மிகவும் சரியான முடிவாகும் என்பதை இங்கு கூற விரும்புகின்றேன். அம் முடிவானது ஒரு யுகத்தின் தேவையாகவே அமைந்தது. அதேபோன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று நான் மேற்கொண்ட அரசியல் தீர்மானமும் மிகவும் சரியான அரசியல் தீர்மானமாகும் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானமும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொண்ட அரசியல் தீர்மானமும் எதனால் சரியான தீர்மானங்களாக அமைகின்றன? அது அரசியல் கோட்பாட்டிற்கு அமைய நாட்டுக்காக மேற்கொண்ட தீர்மானங்கள் என்பதனாலேயே சரியானதாக அமைகின்றன.

2015 ஜனவரி 09ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறுகணமே பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, 2015 ஜனவரி 08ஆம் திகதி 62 இலட்சத்து ஐம்பத்தாயிரம் வாக்குகளைப் பயன்படுத்தி உருவாக்கிய அந்த தூய்மையான அரசியல் பயணத்தையும் அதன் கருப்பொருளையும் அப்பட்டமாக துவம்சம் செய்தார். அச்செயலை மூன்றரை வருடங்களாக சகித்துக்கொண்ட நான் மிக கடினமான பயணத்தை மேற்கொண்டேன். அது ஒரு இலகுவான பயணமல்ல. அமைச்சரவைக்கு இந்த நிலைமை தெரியும். ஆளும் கட்சிக்கும் தெரியும். மூன்றரை வருட பிரச்சினைகள் பற்றி நாட்டுக்கே தெரியும். ரணில் விக்ரமசிங்கவை நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தது திடீர் நிகழ்வல்ல. அது மூன்றரை வருட சவால் நிறைந்த கஷ்டமானதொரு பயணத்தில் மேற்கொண்ட தீர்மானமாகும். ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசியல் எண்ணக்கருவை அப்பட்டமாக துவம்சம் செய்தது மட்டுமன்றி நாட்டையும் அழிவுக்குள்ளாக்கினார்.

ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுக்குள்ளாக்கினார். அவரினால் நானும் பல பாதிப்புகளுக்கு உள்ளானேன். நல்லாட்சி அரசாங்கத்தை அழிவுக்குள்ளாக்கிய, நாட்டை அழிவுக்குள்ளாக்கிய, ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுக்குள்ளாக்கிய, ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியுமாகவிருந்த ஒரே தீர்வு அவரை பிரதமர் பதவியில் இருந்து விரட்டியடிப்பதே என நான் தீர்மானித்தேன். நாம் எமக்கு பொருத்தமான அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மத்திய வங்கியில் இடம்பெற்ற பகல் கொள்ளை பற்றி நான் கடந்த காலங்களில் கூறினேன். 13வது அரசியலமைப்பினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை அவர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து சில சட்டங்களின் மூலம் திரும்ப பெற்றார். அவர் கொண்டு வந்த பல சட்டங்களை நான் எதிர்த்தேன்.

அவருக்கு தேவையான வகையில் நாட்டை அழிவுக்குள்ளாக்கி வருவதை நான் என்னால் முடியுமானளவிற்கு கட்டுப்படுத்தினேன். எனினும் அவர் முரட்டுத்தனமாக நவீன தாராண்மைவாத அரசியல் கொள்கையை இந்த நாட்டை அழிவுக்குள்ளாக்கும் முறைமையாக பயன்படுத்தினார். அவர் வடக்கு மக்களை ஏமாற்றினார். வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழங்க முடியுமாகவிருந்த விடயங்களை நாட்டை துண்டாடாது, நாட்டை காட்டிக் கொடுக்காது, சமஷ்டி முறையில் அல்லாது அம் மக்களுக்கு வழங்க முடியமானவற்றை அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். இந்த நிலைமைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள அரசியல் தீர்மானம் நேற்றும் இன்றும் நாளையும் சரியானதே. கடந்த நாட்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கும், நாட்டுக்கு பொருத்தமான அரசியல் நிகழ்ச்சித் திட்டமொன்றை பலப்படுத்துவதற்கும், நாட்டையும் மக்களையும் பற்றி சிந்திக்கும் மனித நேயமிக்க பண்பட்ட அரசியல் பயணத்தை பலப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

நான் எனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டேன். ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவும், முன்னாள் அமைச்சரவையை இரத்துச் செய்வதற்கும் பராளுமன்றத்தை ஒத்தி வைக்கவும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் அந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த ஐந்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் நான் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி கைச்சாத்திட்டது தூய எண்ணத்துடனும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் ஊழலுக்கு எதிராக மனிதநேய சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும் இந்த நாட்டை பாதுகாப்பதற்குமாகும் என்று நான் தெளிவாக குறிப்பிடுகின்றேன்.

இந்த அரசியல் நெருக்கடியும் அரசியல் அமைதியின்மையும் நமது நாட்டுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் 1947ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட ஒருவித புதிய அனுபவமாகும். ஆயினும் உலகிற்கு இதுவொரு புதிய அனுபவமல்ல. ஜனநாயக நாடுகளில் அண்மைக்காலமாக இவ்வாறான அரசியல் நெருக்கடிகளும் அமைதியின்மையும் ஏராளமாக ஏற்பட்டதை காரணக்கூடியதாகவே இருக்கின்றது. நமது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மோதல்கள் மிக்க நடத்தைகளை கட்சி பேதமின்றி அருவருப்புடன் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவை எவ்விதத்திலும் தகுந்த செயல்கள் அல்ல. எமது கோட்பாடுகளை நாம் ஜனநாயக ரீதியிலேயே வென்றெடுக்க வேண்டும். உடல் பலத்தால் அல்ல. வேகத்தால் அன்றி விவேகத்தாலும் மனோபலத்தாலும் ஆன்மீக வழியிலேயே அப்பிரச்சினைகளை நாம் வெற்றி கொள்ளுதல் வேண்டும்.

ஆகையால் இந்த அனைத்து தன்மைகளையும் கவனத்தில் கொண்டே இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் சமர்பித்த வழக்குகள் இதுவரை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவற்றுள் சிலவற்றுக்கே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவை எவ்வகையான வழக்குகள்? இவை கொலை தொடர்பானவையோ? கொள்ளைகள் தொடர்பானவையோ? பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளோ அல்ல. மாறாக இவை அனைத்தும் அரசியல் வழக்குகளே. இந்த அரசியல் வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி நாட்டுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆயினும் நான் எப்போதும் நீதிமன்றத்தை மதிக்கின்றேன். நீதிமன்றத்தினால் வழங்கப்படும் அனைத்து தீர்ப்புகளையும் நான் மிகுந்த கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வேன். இருப்பினும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளைப் பற்றிய மக்களின் கருத்து வேறுபட்டதாகவே இருக்கின்றது.

இந்த அரசியல் நெருக்கடி நிலைமைக்குள் நாம் ஒரு ஜனநாயக சமூகத்தின் சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமிக்க எப்போதும் அரசியல் யாப்பினை பாதுகாக்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றோம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். குறிப்பாக இங்கு காணப்படுகின்ற நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு நேற்று என்னை சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் நான் மிகத் தெளிவாக எனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன் அவர்கள் இதுவரை என்னை மூன்று தடவைகள் சந்திருக்கின்றனர். அதன்போது மிகுந்த சிநேகபூர்வமாக நாம் கலந்துரையாடினோம். அனைத்து கட்சிகளுடனும் நாம் நட்புடனேயே பிரச்சினைகளை கலந்தாலோசிக்கின்றோம். அந்த வகையில் நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் நான் கூறியதை இன்று இவ்விடத்திலும் கூறுகின்றேன். பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களே இருக்கின்றார்கள். இந்த 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் கூட நான் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்த மாட்டேன் என்பதை மீண்டும் மிகத் தெளிவாக கூறிக் கொள்கின்றேன். அதற்குக் காரணம் அவருக்கும் எனக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினையோ எம் இருவருக்கும் இடையிலான நிறங்கள் பற்றிய பிரச்சினையோ அல்ல. நான் அப்படி செய்வதற்கான காரணம் அவர் இந்த நாட்டுக்குப் பொருந்தாத அரசியல்வாதி என்பதினாலேயே ஆகும். அவரது நோக்கு இந்த நாட்டுக்கு உகந்ததல்ல. அவரது சிந்தனையும் இந்த நாட்டுக்கு உகந்ததல்ல. தேசியத்துவம், நமது என்ற உணர்வு, நமது மரபுரிமைகள், கலாசாரம், பழக்க வழக்கங்கள், நமது சம்பிரதாயம், நமது பௌத்த மற்றும் ஏனைய மத கோட்பாடுகள் ஆகிய எதுவுமே அவரிடம் இல்லை.

ஆகையால் நான் எடுத்த இந்த அரசியல் தீர்மானங்களினால் என்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பாடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் என்னுடன் கோபம் கொண்டிருப்பது மாத்திரமன்றி என் மீது கடும் வெறுப்பையும் கொண்டிருப்பார்கள் என நான் அறிவேன். அன்பின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே உங்களின் தற்போதைய தலைவர் உங்களின் மதிப்பு வாய்ந்த அரசியல் கட்சியை அழிவுக்குள்ளாகினார். டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் முன்னெடுத்த அந்த பாரிய அரசியல்கட்சி அந்த அரசியல் தலைவர்களின் கொள்கைகள் குறித்து எமக்கு சில கருத்து வேற்றுமைகள் உள்ளன. என்றாலும் அந்த அனைத்து தலைவர்களும் நாட்டை நேசித்தார்கள். அந்த அனைத்து தலைவர்களும் என்னுடையவும் உங்களுடையவும் தாய்நாட்டின் மீது பற்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களின் துன்பங்களை விளங்கியிருந்தார்கள். என்றாலும் ரணில் விக்ரமசிங்க இந்த எந்தவொன்றையும் கவனத்தில் எடுக்கவில்லை.

எனவே, இந்த அனைத்து நிலைமைகளையும் கவனத்திற்கொள்ளும் போது முக்கியமாக நாட்டின் எதிர்காலத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம். இதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும். ஒருபோதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று ரணில் விக்ரமசிங்கவின் புதிய தாராண்மைவாத அரசியல் கொள்கைக்கு மாற்றீடாக தேசப்பற்றுள்ள ஒரே மனிதநேய அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமேயாகும் என நான் தெளிவாக கூறுகின்றேன்.

இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை கூடினால் இன்னும் 07 நாட்களுக்குள் முடிவுக்கு வருமென நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன். எதிர்வரும் வாரத்திற்கும் இந்த அரசியல் நெருக்கடியையும் அமைதியின்மையையும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவேன் என நான் உங்களிடம் தெளிவாக உறுதியளிக்கிறேன். அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே ஆகும். இந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் சமாதான கரங்களை நீட்டுகின்றேன். நாம் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வோம். பிரச்சினையை உருவாக்கியது நானல்ல. பிரச்சினையை உருவாக்கியதும் நாட்டை அழிவுக்குள்ளாகியதும் ரணில் விக்ரமசிங்கவேயாவார் என நான் மிகத் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். அந்த அரசியல் பாவத்தை நாம் நாட்டுக்காக தீர்த்துக்கொள்வோம். அந்த நற்பணியில் அனைவரையும் பங்குதாரர்களாக்கிக் கொள்வோம். அதன் மூலம் நாட்டை பாதுகாப்போம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்