இலங்கை
Typography

“ஐனாதிபதித் தேர்தலில் போட்டிட்ட போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட்டு வரலாற்றுத் துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழைத்துள்ளார்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

“ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவையோ மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பையோ கூட்டமைப்பு கொடுக்கவில்லை. மாறாக அரசியலமைப்புக்கு முரணான செயற்பாட்டை எதிர்த்து எங்கள் ஐனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையிலேயே தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாவை சேனாதிராஜா நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் ஒரு மோசமான ஆட்சி நடைபெறுவதால் அதனை மாற்ற வேண்டுமென்ற அடிப்படையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்பட்டார். இவ்வாறு பொது வேட்பாளராக வந்தபோதும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வழங்கிய வாக்குறுதிகளையும் மறந்து அல்லது அதனை மறுதலிக்கின்ற வகையில் அவருடைய தற்போதைய செயற்பாடு அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாகக் கடந்த மாத இறுதியில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவைப் பதவி நீக்கிப் புதிய பிரதமராக மஹிந்த ராஐபக்ஷவை நியமித்திருக்கின்றார். ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடுகள் அரசமைப்பை மீறும் சட்டத்துக்கு முரணான செயற்பாடாகவே காணப்படுகின்றது. இது ஜனநாயக விரோதச் செயற்பாடு என்பதனாலேயே ஜனாதிபதியின் செயற்பாட்டை தற்போது பலரும் எதிர்த்து வருகின்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். ஆனால், எங்களது மக்களின் ஆதரவைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன இன்று மீளவும் மஹிந்தவை நியமித்திருப்பது தான் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் பல்வேறு எதிர்பார்ப்புடன் ஆதரவு தெரிவித்து எமது மக்கள் வாக்களித்துக் கொண்டுவந்த மைத்திரிபால சிறிசேனவின் இத்தகைய செயற்பாடுகள் துக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதுவும் சட்டத்துக்கு முரணாக ஜனநாயக மரபுரிமையை மீறுகின்ற செயற்பாடுகளையே அவர் மேற்கொண்டிருக்கின்றார்.

ஆகவேதான் எங்களது ஐனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அந்தத் தீர்மானம் என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவானதோ அல்லது மஹிந்தவுக்கு எதிரானதோ அல்ல. நாங்கள் யாரையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. அரசமைப்பை மீறி ஜனாநாயகத்துக்கு விரோதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் செயற்பாட்டையே எதிர்க்கிறோம்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்