இலங்கை
Typography

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும், சமூகத் தலைவர்களும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடு செய்ய முன்வரவேண்டும் என்று பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

கொழும்பு புதிய நகரமண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாதுளுவாவே சோபித தேரோ நினைவு நிகழ்வு இடம்பெற்றது. அங்கு நினைவுப்பேருரையை நிகழ்த்திய போதே பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "சகல குழுக்களினதும் தார்மீகத் தலையீடு ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது. வண. மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். அதேபோன்ற அணுகுமுறையே இன்று- முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகிறது.

அத்தகைய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் இன்றைய நெருக்கடி பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து இருக்கிறது. எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையே கடுமையான மோதல் ஒன்று ஏற்படும் என்றே எனக்குத் தெரிகிறது. இணக்கத்தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில் தற்போதைய நெருக்கடி வன்முறைகளில் போய் முடியலாம். பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான பலப்பரீட்சை பரந்தளவிலான பாதக விளைவுகளைக் கொண்டுவரக் கூடும். சகலரும் ஒன்றிணைந்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த உதவவேண்டியது எமது பொறுப்பாகும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்