இலங்கை
Typography

ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையின் மூலம், பாராளுமன்றத்தில் அவருக்குள்ள பங்களிப்பின் சுதந்திரத் தன்மையை விட்டுக்கொடுத்துள்ளதுடன் அரசியலமைப்பு அதிகாரத்துக்கு மேலாகவும் அதற்கு அப்பாலும் சென்றுள்ளார் என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

“சபாநாயகர் அவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட்டதையிட்டு எனக்கு கவலையாக உள்ளது. சபாநாயகரின் நிலைப்பாடு அரசியலமைப்பில் மதிக்கப்படும் வகையில் உள்ளது. தற்போதைய சபாநாயர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவானார். சபை உறுப்பினர்கள் அவரை சபாநாயகராகத் தெரிவு செய்தனர். பாராளுமன்ற அமர்வுகளின்போது சபையை நடத்திச் செல்வதே அவரது ஒரேயொரு பணி என்று அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது. அத்துடன் நடுநிலையான நபர் என்ற ரீதியிலேயே அவர் செயற்படுகிறார். அவர்தான் நடுவர். அதற்கு அப்பாலான பங்களிப்பு எதுவும் அவருக்கு இல்லை. எந்தவொரு அரசாங்கத்தையும் அங்கீகரிக்கவோ அல்லது அங்கீகரிக்க முடியாத அதிகாரமோ சபாநாயகருக்கு இல்லை.

பாராளுமன்றத்தில் தலைமைத்துவத்தை வகிப்பவர் என்ற வகையில் நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி நியமிப்பவர்களை சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும். அவர் எவராக இருப்பினும் அவரை சபாநாயகர் அங்கீகரித்தாக வேண்டும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது வேறு கதை. அதன்பிறகு அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம். ஆனால் அது வரை சபாநாயகர் அதிகாரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட பங்கினையே செயற்படுத்த வேண்டும். ஆனால் இப்போது அவர் ஒருசில வீரர்களின் பேச்சை மட்டும் கேட்கும் நடுவரைப் போல் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

சட்டசபை என்பது சபாநாயகர் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல் ‘மனச்சாட்சி’ என்ற விவகாரம் அல்ல. முன்னர் அவர் அவரது மனச்சாட்சியின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு மாறிச் சென்று அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவரது மனச்சாட்சியின்படி திரும்பி வந்தார். ஆனால் இந்த விடயத்தில் அவர் அவரது மனச்சாட்சியின்படி செயற்பட முடியாது. அவரது பணி பாராளுமன்றத்தில் நடுநிலை வகித்து செயற்படுவதேயாகும். அவர் எந்தப் பக்கத்தையாவது எடுப்பதாக இருக்கும் அந்த சந்தர்ப்பம் முதல் அவருக்கு பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாமற் போகும்.

116 பாராளுமன்ற உறுப்பினர்களின் கடிதத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவர் நடுநிலைப் பங்களிப்பில் இருந்து தவறிவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கடிதங்களை சபாநாயகர் பெற்றுக்கொள்வதை அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை. குறிப்பாக பாராளுமன்ற அமர்வுகளுக்கு வெளியே அவ்வாறு அவர் கடிதத்தைப் பெற்றுக்கொண்டது அவர் பக்கச் சார்பானவர் என்ற அபிப்பிராயத்தை தருகிறது.” என்றும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு சென்று யாருக்கு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 70ஆவது சரத்தின்படி பாராளுமன்றம் 4.5 வருடங்களின் பின்னரே கலைக்கப்பட முடியும் என்று திருத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வேண்டும். அத்துடன், ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை உடையவர் என்று கூறும் 33வது சரத்து ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டும், ஒத்திவைக்கும் மற்றும் கலைக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டத்தின் கீழ் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2002இல் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி கலைக்க முடியாது என்ற வகையில் அறிமுகப்படுத்திய திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பாராளுமன்ற கலைப்பு என்பது எப்போதுமே நிறைவேற்று அதிகாரமாக இருந்துள்ளது. அதனை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி இல்லாமலாக்க முடியாது.

எனவே 33வது சரத்து தற்போதைய 19வது திருத்த சட்டத்தில் உள்ளடக்க வேண்டியதாயிற்று. அல்லாவிட்டால் 19வது திருத்த சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்பட்டிருக்கும். ஜனாதிபதிக்கு எந்த அதிகாரம் இருக்கிறது. அது தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அதனை பயன்படுத்த வேண்டும். அது மக்களுக்கும் நாட்டுக்கும் தேவைப்படும் போது, ஸ்திரமற்ற நிலையில் உள்ள பாராளுமன்றம் கலைக்கப்படலாம்” என்று முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்