இலங்கை
Typography

“தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் போதியளவு முன்னேற்றம் காணப்படவில்லை. இது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா டெப்ளிட்ஸிட்க்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, பிளவுபடாததும் பிரிக்க முடியாததுமான நாட்டுக்குள், உண்மையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை அடைவது அத்தியாவசியம் என்பதை வலியுறுத்திய இரா.சம்பந்தன், அத்தகைய தீர்வை அடைய முடியாத பட்சத்தில், இந்த நாடு எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது போகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகரைத் தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமரை நீக்கியமை உள்ளடங்கலாக இடம்பெற்ற சம்பவங்கள், அரசியலமைப்புக்கு விரோதமானவை என்றும் கூறியுள்ளார்.

பாராளுமன்றம் கூடுவதைக் காலம் தாழ்த்தும் செயலானது, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் அது, கட்சி தாவும் நபர்களுக்கு பல்வேறு பதவிகளையும் வேறு காரியங்களையும் கொடுத்து, சட்டபூர்வமான ஒன்றாகக் காட்டுவதற்கு வழிவகுக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், உடனடியாகச் செயற்பட்டு, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சபாநாயகரிடம் தான் எழுத்து மூலமாகக் கேட்டுக்கொண்டதையும் இரா. சம்பந்தன் எடுத்துக் கூறியுள்ளார்.

அரசாங்கமானது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் போதியளவு கையாளவில்லை எனக் குற்றஞ்சாட்டிய இரா. சம்பந்தன், அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை போன்ற விடயங்களில், அரசாங்கம் மந்தகதியிலேயே செயற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கமானது, சர்வதேசத்துக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அமெரிக்கா வலியுறுத்துகின்றது எனவும் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு, ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினது நோக்கத்துக்கும் அதன் நடைமுறைப்படுத்தலுக்கும், அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுமெனவும், உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்