இலங்கை
Typography

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாகத் தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்கள் கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுப்பது? எங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டு வந்தோம்?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

“ஜனாதிபதித் தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று அன்று சொன்னாயே! ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா? இன்று எங்களைப் பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக நீ மாறி இருக்கின்றாய். இது உனது அழிவுக்கான ஆரம்பம்”என்றும் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் – மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் 15ஆகக் குறைந்து இருக்கின்றோம். அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் (சிவசக்தி ஆனந்தன்) அது மேலும் குறைந்து 14ஆக ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள் தான். அதனைக் கவனமாகப் பிரயோகிக்கவேண்டும். கவனமாகக் கையாளவேண்டும். அதேவேளை, பேரம் பேசவேண்டும். இரண்டையும் செய்கின்றோம். ஏன் இவரைச் சந்தித்தார்? ஏன் அவரைச் சந்தித்தார் என்று வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக்கூடாது. எல்லோரையும் நாங்கள் சந்திப்போம். ஆனால், எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்கமாட்டோம். சரியான தீர்மானத்தையே நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்தத் தீர்மானம் எடுக்கப்படும்.
பாராளுமன்றத்தை திறக்காவிட்டால் நாள் உள்நுழைந்து திறப்போம். நாம் அங்கு செல்வோம். சபையைக் கூட்டி பெரும்பான்மையை அங்கே காட்டுவோம். அதனை அங்கிருந்துதான் காட்ட வேண்டும் என்றும் இல்லை. அதனை எங்கிருந்தும் காட்டலாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்களுடைய கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்கு நான் பகிரங்கமாக ஒன்றைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுப்பது? எங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டுவந்தோம்?

ஜனாதிபதித் தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று அன்று சொன்னாயே! ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா? இன்று எங்களைப் பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக நீ மாறி இருக்கின்றாய். இது உனது அழிவுக்கான ஆரம்பம்”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS