இலங்கை
Typography

“வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை. அத்தோடு, பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும், வடக்கு மாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை வழங்குவதில்லை.” என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் ஆர்.தென்னக்கோன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது

இதன்போது, வட்டுக்கோட்டை பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பாக எழுந்த பிரச்சினையின் போதே அமைச்சர் மனோ இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமாக 850 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தமது அமைச்சினூடக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், இதற்கான திட்ட முன்மொழிவுகளை விரைவுபடுத்தி தமது அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு ஐந்து மாவட்டங்களின் அரச அதிபர்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது பணிகளை விரைந்து முன்னெடுக்க வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் இங்கு குறிப்பிட்டதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க தாம் முயற்சித்தபோதும் வடக்கு மாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்குவதில்லை என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்