இலங்கை
Typography

“20வது திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அதற்கான உரிமையை பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்கக்கூடாது.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

20வது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் சபையில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளதாவது, “தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 19 தடவை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பு இதுவரை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இவ்வாறான நிலையில் 20வது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமது அரசியலமைப்பு தொடர்பில் தீர்மானிக்கும் உரிமையைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு வழங்க வேண்டும்.

மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தை வழங்காது பாராளுமன்றத்துக்குள்ளேயே அதனை முடக்க 225 உறுப்பினர்களும் முயற்சிக்கக் கூடாது. 20வது திருத்தச் சட்டமூலம் பொது மக்களிடம் கொண்டு செல்லப்படுவதை விரும்பாதவர்களே அதனைப் பாராளுமன்றத்தில் தோற்கடிப்பார்கள். எனவே மக்களே தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்க வேண்டும். 20வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம். எனவே, பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனைக் குழப்பக் கூடாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்