இலங்கை
Typography

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுரவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளது போன்று இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால், சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு, தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். 

“மஹிந்த ராஜபக்ஷவின் அணியுடன் கூட்டு சேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் தமது அதிருப்தியை எம்மிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுதந்திரக்கட்சியுடன் மஹிந்த அணியினர் இணைக்கப்பட்டால் சுமார் 10 தொடக்கம் 15 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர். அவர்களையும் இணைத்துக் கொண்டு நாங்கள் தனி அரசாங்கம் அமைப்போம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே துஷார இந்துனில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சுதந்திரக் கட்சியினர் வேண்டுமானால் வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடித்து தமது பலத்தை நிலைநாட்ட முடியும். அதனைவிடுத்து மக்களால் ஒதுக்கப்பட்ட திருடர்கள் கும்பலை இணைத்துக் கொள்வது இச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக அமையாது. எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தீர்மானத்துக்கு உடன்படமாட்டாரென்ற நம்பிக்கையை பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கின்றனர்.

மஹிந்த அணியினர் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்று ஜி.எல் பீரிஸின் வீட்டில் கூடி ஆராயவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக ஐ.தே.க சிறிதும் கலவரம் அடையவில்லை. அவர்கள் இடைக்கால அரசாங்கம் அமைத்தால் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு தனி அரசாங்கம் அமைக்க ஐ.தே.க தயாராக உள்ளது.

சுதந்திரக் கட்சி மஹிந்த அணியுடன் கூட்டு சேர்ந்தால் கட்சியிலிருந்து வெளியெறி ஐ.தே.கவுடன் இணைவதற்கு சுமார் 10 தொடக்கம் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி மக்கள் எமக்கு வாக்களித்தனர். இந்நிலையில் மீண்டும் அதே திருடர்கள் கும்பலை இணைத்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்