இலங்கை
Typography

“அரசாங்கத்துக்கு பாதகமான சூழல் நிலவிய காலத்திலேயே உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் நடத்தியது. அப்படியான நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கப் போவதில்லை” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்ற முடிவு எடுத்தவுடன், ஆறு மாகாண சபைகளுக்கும் உடனடியாகத் தேர்தலை நடத்த முடியும். இது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான தீர்மனங்களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே எடுக்கிறது. அந்த ஆணைக்குழு மீது எமக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுயாதீன அரசசேவை ஆணைக்குழுவின் ஊடாக அரசாங்க சேவையாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நாம் அமைத்திருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் எமக்குப் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களை உறுதிப்படுத்தியதாலேயே தற்பொழுது மேலும் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்துகின்றனர். மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தும். எதிரணியினர் அச்சப்படத்தேவையில்லை. பாராளுமன்ற தேர்தலை நடத்தினோம். அரசாங்கத்துக்கு சாதகமான சூழல் இல்லாதபோதும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தியிருந்தோம். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அத்தேர்தல்களை பிற்போட்டிருக்க முடியும், ஆனால் நாம் அவ்வாறு செய்யாது உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தினோம்.

அந்த வரிசையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்துவோம். பழைய முறையில் தேர்தலை நடத்துவதா அல்லது புதிய முறையின் கீழ் தேர்தலை என்பது பற்றியே கலந்துரையாடி வருகின்றோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்