இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன்போது, முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரக் கட்சியைப் புனரமைக்கும் பணிகள் தொகுதி, பிரதேச, மாவட்ட மட்டங்களில் எண்பது வீதம் பூர்த்தியடைந்துள்ளன.

எதிர்வரும் வாரங்களில் பிரதியமைச்சர் அங்கஜன் தலைமையில் வடக்கில் கட்சி புனரமைக்கப்பட்டு அமைப்பாளர்களும் நியமிக்கப்படுவர். இதையடுத்து செப்டம்பர் 02 இல் தேசிய மாநாடு நடத்தப்படவுள்ளது. இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் விசேட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினத்தவர் அதிகமானோர் எமது கட்சியில் இணைந்துள்ளனர். குருநாகலில் நடைபெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தை விடவும் அதிகமானோர் செப்டம்பரில் இடம்பெறும் மாநாட்டில் பங்கேற்பர்.

முன்னாள் அமைச்சர் தயாசிறியினால் தயாரிக்கப்பட்ட கட்சி புனரமைப்பு அறிக்கை நேற்று மத்திய குழுவில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் யாப்பு குழுவில் எமது கட்சி சார்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எனினும் அரசியலமைப்பு குழு அறிக்கை கிடைக்கப் பெறவில்லை.

அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய மாகாண சபை தேர்தல் முறைமையே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும். மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் விருப்பு முறை மற்றும் மாவட்ட முறைமைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. எமது கட்சி ஒருபோதும் தேர்தல்களை பிற்போட விரும்பவில்லை. நாட்டின் 41 புத்திஜீவிகள் கடந்த ஒன்றரை வருடகாலமாக இணைந்து தயாரித்த நிலையான அபிவிருத்தி அறிக்கை மூன்று நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்