இலங்கை
Typography

நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

“யாழ். குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. இவை தவிர பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராமேஸ்வரத்திலும் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளாலேயே வடக்குக்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே ரெஜினோல்ட் குரே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணம் கோட்டையில் ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் பின்னர் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயரும் இருந்தனர். பின்னர் அவர்களைத் தொடர்ந்து இராணுவமும் பின்னர் விடுதலைப் புலிகளும் இருந்தனர்.

இவ்வாறான நிலையில் தற்போது அங்கு இராணுவம் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குடாநாட்டுக்குள் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. இப் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடல் வழியாகவே 80 வீதம் வருகின்றது. 10 வீதம் விமானம் மூலமும், 10வீதம் துறைமுகங்கள் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றன. இதிலும் குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்