இலங்கை
Typography

“மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனாலும், அவர் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இருப்பது, ஏற்புடையதல்ல” என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது. இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.

மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அந்தந்த மத விவகாரங்கள் அந்தந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது. குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை. இந்து கலாசார அமைச்சு இதுவரை, டி.எம்.சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். காதர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்." என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்