இலங்கை
Typography

தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரை காலமும் பேணிப் பாதுகாத்து, அந்தப் பலத்தினூடாக தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து, கட்சியை விட்டு விலகிச் செல்வது குறித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது, மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் எனக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்திருந்தன. இருந்த போதிலும் வடக்கிற்கு முதலாவதாக மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுவதால் அதனை வித்தியாசமான முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக விக்னேஸ்வரனை நிறுத்தினோம்.

எமது சிந்தனையை ஏற்று மாவை சேனாதிராசா அன்று அதனை விட்டுக் கொடுத்தமையாலேயே இன்று விக்கினேஸ்வரன் முதலமைச்சராகவுள்ளார். குறிப்பாக அன்று முதலமைச்சராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்கும் போது, தான் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே இருப்பேன் எனவும் அதன் பின்னர் மாவை சேனாதிராசாவே பொறுப்பேற்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறிய போதும் இன்று முழுக் காலமும் அவரே இருந்துவிட்டார்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதனை விட்டுக்கொடுத்திருந்தது. ஆனால் இம் முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கிழக்கிலும் முதலமைச்சரை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் வடக்கில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விரும்பிக் கேட்டால் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள நிலையில் இன்னமும் நாம் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக தீர்மானிக்கவில்லை.

யாரை நிறுத்துவது என்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைளை இனி வரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ளோம். இதேவேளை, வடக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சரை மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் சாத்திய கூறுகள் இல்லை. அவர் கட்சியோடு முரண்பட்டுக்கொண்டு, தாம் தனிக் கட்சி ஆரம்பிக்க போவதாகக் கூறி வருகின்ற நிலையில் அவரை வேட்பாளராக நிறுத்த எந்த மானம் மரியாதை உள்ள கட்சியும் சிந்திக்காது.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவரை வலிந்து அரசியலுக்குள் கொண்டுவந்து முதலமைச்சராக்கியிருந்தது. எனவே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து போவது குறித்து சிந்திக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்