இலங்கை
Typography

தம்மை வீரர்களாக அடையாளம் காட்டும் தனி நபர்கள் ஜனாதிபதியாக முயற்சித்தாலும், அவர்களால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னரும் தனிப்பட்ட நபர்களை முன்நிலைப்படுத்தி நாட்டின் தலைவர்களாக்கியபோதும், அவர்கள் எவரும் நாட்டை கட்டியெழுப்பவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கப் போவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கே.டி.லால்காந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தனித் தனி வீரர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தனிநபர்கள் ஜே.வி.பிக்கு சவாலானவர்களும் அல்ல. மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிநபரை நாம் சவாலாக எடுத்தோம். அதற்கமைய அவரைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம். இவ்வாறான நிலையில் தனித் தனி வீரர்கள் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கப்போவதில்லை.

இதுபோன்றுதான், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகாயத்தில் இருந்து கொண்டுவந்தவர்போல அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். முன்னாள் பிரதமர்களின் மகள், இன்னாருடைய மனைவி எனக் கூறியே அவரை அரசியலுக்குக் கொண்டுவந்தனர். ஆனால் அவர் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை. தற்பொழுது கோட்டாபய பற்றிப் பேசுகின்றனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்