இலங்கை
Typography

அதிகளவிலான ஏற்றுமதி மற்றும் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கட்டியெழுப்ப முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வரலாற்றில் முன்னொரு போதுமில்லாத விதத்தில் அதிகூடிய ஏற்றுமதியை 2017இல் மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும், 1900 மில்லியன் டொலர் தனியார்துறை முதலீடுகளை அதே ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசின் திட்டங்களையும் அபிவிருத்தி முயற்சிகளையும் மக்கள் மத்தியில் கொண்டுசென்று அரசுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி நாட்டின் அரசியல், பொருளாதார ஸ்திர நிலையை உத்தரவாதப்படுத்தும் பாரிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதை மறந்துவிடக்கூடாது. எந்தவொரு திட்டத்திலும் முகாமைத்துவ உதவியாளர்களின்றி அதனை வெற்றிகொள்ள முடியாது.

அரச துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதென்பது எந்தவொரு ஆட்சியிலும் சாத்தியப்பட முடியாததாகும். அது இங்கு மட்டுமல்ல உலகின் எந்தவொரு நாட்டிலும் நடக்கமுடியாததாகும்.

தனியார்துறையை ஊக்குவித்து அதனூடாக அரச துறைக்கு ஈடான வேவைய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வெளிநாட்டு தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இதனை முன்னெடுக்கவுள்ளோம்.

உள்நாட்டு உற்பத்திகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், அரச, தனியார் துறைகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என நாம் நம்புகின்றோம். எதிர்காலத்தில் அரசு ஊழியர்கள் பெறக்கூடிய சம்பளத்துக்கு நிகரான சம்பளத்தை தனியார்துறை ஊழியர்களும் பெறக்கூடிய திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டில் மேலும் பல வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றோம். உற்பத்தித் துறையிலும், சுற்றுலாத் துறையிலும் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த முதலீடுகளை முடக்கி உரிய பயனைப் பெற்றுக்கொள்வதே இலக்காகும். அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர்களையும், யுவதிகளையும் ஈடுபடுத்தவுள்ளோம்.

அதேவேளை, சில அரச துறைகளில் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றையும் கூடிய விரைவில் நிரப்பவுள்ளோம். அமெரிக்கா, சீனா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் அரச துறையை விட தனியார் துறைகளிலேயே இளைஞர்கள் வேலைவாய்ப்பில் நாட்டம் செலுத்துகின்றனர். அரசுகள் கூட அதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்து வருகின்றன. தனியார் துறை மேம்படுத்தப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்.

பாரிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான மூலதனங்களை மேற்கொள்வதற்காக வங்கிகளுக்கான நிதியை அதிகரித்துக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியான அபிவிருத்தி வங்கியொன்றையும் நிறுவ எண்ணியுள்ளோம். இதனூடாக முதலீடுகளை அதிகரித்து தனியார்துறை வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும், உற்பத்திகளை பெருக்கி ஏற்றுமதி செய்யவும், அதனூடாக தொழில்வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு புதிய வியூகம் அமைத்து செயற்படவிருக்கின்றது. தேயிலை, இறப்பர், தேங்காய், கறுவா, கொக்கோ போன்றவற்றின் உற்பத்தியை அதிகரித்து அவற்றுக்கான வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பை பெருக்கிக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2020 ல் பொருளாதார பலம்மிக்க நாடாக எமது நாட்டை மாற்றுவதே எமது இலக்கு இதன்பொருட்டு நாட்டு மக்களனைவரும் ஒன்றுபட வேண்டும். புதிய பதவியில் அமர்ந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிமிடம் முதல் நாட்டுக்கும், மக்களுக்குமான பணியை ஆரம்பிக்க வேண்டும். வளமானதொரு நாட்டுக்காக எம்மை அர்ப்பணிப்போமாக.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS