இலங்கை
Typography

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவே என்பது கட்சிக்குள் பலரது எண்ணம் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோட்டாபய ராஜபஷவை களமிறக்க ஆலோசித்து வருகின்ற நிலையில், பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் செனவிரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டுக்கான தலைமைத்துவம் குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அதிகமாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.

சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தூதரகங்களில் கூட இன்று கோட்டாபய ராஜபக்ஷ குறித்து கருத்துக்களை முன்வைக்கின்றனர். கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் எதிர்கால தலைமைத்துவத்தை ஏற்றுகொள்ள பொருத்தமானவர் என நானும் இன்னும் பலரும் எமது கட்சிக்குள் தெரிவித்துள்ளோம். எனினும் அன்று பலர் இந்தக் கருத்துக்களை எதிர்த்தனர். இராணுவ தலைமைத்துவம் என்ற விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே இன்று எமது கருத்தினை ஏற்றுகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS