இலங்கை
Typography

புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கான தனது கடப்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய ஜனாதிபதி செயற்படவேண்டும். புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைத்து, அதிலே முக்கியமான ஒரு விடயமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்புத் தயாரிப்புப் பணிகள் பற்றி ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிடாதமை ஏமாற்றத்தை அளிக்கின்றது.

ஜனாதிபதி தனது உரையில் இதனைக் குறிப்பிடாததால், தோற்றுப்போன விடயமாகவோ அல்லது இனி நடைபெறாதோ என்று எவரும் அதனைக் கைவிடமுடியாது. ஏனெனில், அது ஒரு தனி மனித அபிலாஷை மட்டுமல்ல. அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையாகும்.

அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என உறுதி வழங்கியிருந்தார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது நாட்டில் உள்ள 90 வீதமானவர்கள் புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கு ஆணை வழங்கியுள்ளனர்.

இந்த பாராளுமன்றத்தில் உள்ள சகலரும் இணைந்து ஏகமனதாக பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றியுள்ளோம். அது மாத்திரமன்றி அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தனது உரையில் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டாத காரணத்தால் இவற்றை அரசு கைவிட்டுவிட்டதாக நாங்கள் கருதப்போவதில்லை.

அனைத்து மக்களும் சேர்ந்த செய்கின்ற பிரதானமான பணியை தொடர்ந்தும் முன்னெடுப்போம். ஜனாதிபதி இந்த ஆணையை பெற்றவாரக இருப்பதுடன், அவருக்கு எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தில் இதற்குத் தலைமை தாங்கவேண்டும். அந்தக் கடமையிலிருந்து அவர் தவற முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். அரசு இதனைச் செய்து முடிக்கத் தயங்கினால் அதற்கான முழு அழுத்தங்களையும் பிரயோகிப்போம்.

அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி சகலருக்கும் அவசியமானது. புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சகலரும் ஒற்றுமையாக வாழ முடியும். இதனைப் புறந்தள்ளினால் வேறு பிரதிபலன்கள் நாட்டில் ஏற்படலாம். சகல இனங்களின் சுபீட்சத்துக்கும் புதிய அரசமைப்பே அவசியமானது. கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிடாமல் விட்டமை பாரிய குறைபாடாக இருந்தாலும் அந்தச் செயற்பாடு நடக்கவேண்டும். நடக்க வைப்போம்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்