இலங்கை
Typography

காணாமற்போனவர்கள் பணியகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். 

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தின் கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமற்போனோருக்கு நீதிகிடைப்பதற்கான பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்காக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஜெயதீபா புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹாந்தி அன்ரெனிரீ பீறிஸ், சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, மரிக் ரஹீம், சோமசிறி கே லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் மூன்று வருடத்திற்கான சேவையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பகிரங்கமான முறையில் இந்த ஆணைக்குழு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இந்த அலுவலகத்தை அமைப்பதற்காக 1.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS