இலங்கை
Typography

இலங்கை அரசு, சர்வதேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ்சென் சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட்பைசென்ஸேனிஸ் ஆகியோர், எதிர்க்கட்சித் தலைவரை நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் உள்ள அரசியல் நிலைமை தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவை எட்ட வேண்டும் என தெரிவித்த அதேவேளை புதிய அரசியலமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணையை பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதங்களை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்