இலங்கை
Typography

நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வார இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் தேசிய அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டுடனேயே செயற்பட வேண்டும் எனவும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை அமைச்சரவையிலேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தினுள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் இங்கு வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு ஓய்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் மாத்திரமே நடைபெற இருக்கிறது. பிரதமரை மாற்றப் போவதாகவும் சிலர் கதை கூறியிருந்தார்கள். இரு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படுகையில் பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். அமைச்சரவை மறுசீரமைப்பிற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ.தே.க மற்றும் சு.க தரப்பு யோசனைகள் கிடைத்த பின்னர் அறிவிப்பு வெளியாகும். இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி இதனை அறிவிப்பார்.

சு.க. என்று கூறிக் கொள்ளும் சிலர் பிரதமர் மாற்றப்படவுள்ளதாகவும் சு.க. அரசு உருவாவதாகவும் கூறியிருந்தார்கள். ஐ.ம.சு.மு செயலாளர் கூறியதாக வெளியான செய்தி பொய்யானது. ஐ.ம.சு.மு செயலாளர் ஆஸ்பத்திரியில் இருந்த போதே இந்த அறிவிப்பு வெளியானது.

அமைச்சரவை கூட்டத்தில் சு.க. அமைச்சர்கள் பங்கேற்றிருந்தார்கள். அமைச்சர்களான சுசில் பிரேம் ஜெயந்த், தயாசிரி ஜெயசேகர ஆகியோர் வருகை தரவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் தொடர்வதா? இல்லையா? என்பது அரசியல் ரீதியான விடயமாகும். ஐ.தே.கவிற்கும் சு.க.விற்கும் இது தொடர்பில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு இரு தரப்பு ஒப்பந்தம் தொடர்பில் பிரச்சினை கிடையாது.

இரு தரப்பு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் இரு தரப்பு ஒப்பந்தம் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு கைச்சாத்திடப்படும்.இந்த ஒப்பந்தத்தின் எந்த இடத்திலும் 2 வருடங்களுக்கே இணைந்திருப்பதாக எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

பிரதமரை மாற்றும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளும் ஒன்றாக செயற்பட்டு ஜனவரி 8 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி உரிய சமயத்தில் தனது அறிவிப்பை வெளியிடுவார்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்