இலங்கை
Typography

“புதிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முடன் இதுவரை பேசவில்லை. புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏதும் எமது கட்சிக்கும் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்கள் பலமடைந்துள்ளன. நாட்டு மக்கள், மீண்டும் அவரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க, முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக, சர்வதேசத்தின் முன்னிலையில் மஹிந்த ஏற்கெனவே உறுதியளித்துள்ளார். அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

நாம் எந்தக் கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறோம் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. எது எவ்வாறாயினும், எமது கட்சியின் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. எமது கட்சியின் கொள்கைகளுடன் இணங்கிச் செயற்பட விரும்பும் எந்தக் கட்சியுடனும் இணைந்துச் செயலாற்றத் தயாராக உள்ளோம்.” என்றுள்ளார்.

Most Read