இந்தியா
Typography

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் டிசம்பர் 09 மற்றும் 14ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்லியை சேர்ந்த லோக் நிதி, டெவலப்பிங் சொசைட்டிஸ் சென்டர் ஆப் ஸ்டடி ஆகிய நிறுவனங்கள் இணைந்து குஜராத்தில் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பது குறித்து கருத்து கணிப்பை நடத்தின. முன்னதாக, ஆகஸ்ட் மாதமும் இவை கருத்து கணிப்பு நடத்தின.

182 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 50 தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 200 இடங்களில் 3,757 வாக்காளர்களிடம் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் எடுத்த கருத்து கணிப்பு சதவீதமும், தற்போதைய சதவீதமும் மாறுபட்டுள்ளது. குறிப்பாக காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்படுகிறது.

தற்போதைய கருத்து கணிப்பின்படி பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 47 என்ற அளவிலும், காங்கிரஸ் கட்சிக்கு 41 சதவீதமும் உள்ளது. பா.ஜ.க தான் முன்னிலையில் உள்ளது என்ற போதிலும், கடந்த முறையை காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது.

இளைஞர்கள் மத்தியிலும் பா.ஜ.க.விற்கு இருந்த செல்வாக்கானது குறைந்துள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட முதல் ஆய்வில் இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க.விற்கு 63 சதவீத ஆதரவு இருந்தது. 18 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட புதிய கருத்து கணிப்பில் இந்த சதவீதம் 44 ஆக குறைந்துள்ளது. கடந்த கருத்துக்கணிப்பை விட 19 சதவீதம் குறைவாகும்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 42 சதவீத இளைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆய்வை காட்டிலும் 14 சதவீத கூடுதல் வளர்ச்சி என்றபோதிலும் பா.ஜ.க.வுடன் ஒப்பிடும்போது இரண்டாவது இடத்திலேயே காங்கிரஸ் உள்ளது. இதன் மூலம் குஜராத்தில் இளைஞர்கள் ஆதரவை பா.ஜ.க வெகுவாக இழந்து வருகின்றது.

அதே நேரத்தில் 30 முதல் 39 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களில் 49 சதவீதம் பேர் பா.ஜ.க.விற்கும், 43 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது பா.ஜ.க.விற்கு 9சதவீத சரிவு மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீத வளர்ச்சியாகும். 40 முதல் 59 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுள்ள வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 40 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும், 47 சதவீதம் பேர் பா.ஜ.க.விற்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களில் 40 சதவீதம் பேர் காங்கிரஸ், 50 சதவீதம் பேர் பா.ஜ.விற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்