இந்தியா
Typography

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசியல் ஏதும் பேசவில்லை என்றும், தமிழக வளர்ச்சி பற்றியே பிரதமரோடு பேசியதாகவும் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பிரதமரிடம் கட்சி ரீதியான அரசியல் மற்றும் அதிமுக-வில் உள்ள பிளவுகள் குறித்து பேசவில்லை. தமிழகத்தின் வளர்ச்சி பற்றி மட்டுமே பேசினேன்.

தமிழகத்தின் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்க மத்திய அரசிடம் கோரினேன். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருவதில் எந்த தவறும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் இடையே எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை.

நான் உட்பட முக்கியஸ்தர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்து தான் முதலமைச்சர் முக்கிய முடிவு எடுக்கின்றார். எந்த நிபந்தனையும் இல்லாமல் தான் எடப்பாடி அணியுடன் இணைந்தோம். தர்ம யுத்தம் முடிந்ததால் தான் அணிகள் இணைந்தன. எந்த சூழலிலும் என்னால் முதல்வருக்கு மனவருத்தம் ஏற்படாது.” என்றுள்ளார்.

Most Read