இந்தியா
Typography

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற நளினிக்கு சொந்தமாக வீடு இல்லை என்கிற காரணத்தினால், அவருக்கு பரோல் வழங்குவதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

முதல்வர் பழனிசாமியை சந்தித்து முறையிட உள்ளதாக, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார்.

இவர்களது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடு நடந்துவருகிறது. இதற்காக, 30 நாட்கள் பரோல் கோரி நளினி விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் நளினி, முருகன் இருவரையும் வழக்கறிஞர் புகழேந்தி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது,

“வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளாக உள்ள நளினி, தனது மகளின் திருமணத்துக்காக, பரோல் கோரி விண்ணப்பித்தார். இந்த மனுவின் மீது சிறை கைதிகளுக்கான நன்னடத்தை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ‘நளினிக்கு வேலூரில் சொந்த வீடு இல்லை.

காட்பாடியில் வாடகை வீடு மட்டும் உள்ளது. எனவே, அவருக்கு பரோல் வழங்கக்கூடாது’ என்று சிறை நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்” என்றார்.

“இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட உள்ளோம். சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை அதிகாரிகள் அளித்த பரிந்துரையை ஏற்காமல், நளினிக்கு பரோல் வழங்குமாறு கோரிக்கை வைக்கப்படும்” என்றார்.

மேலும், நளினியின் பரோல் தொடர்பான மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்