இந்தியா
Typography

அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. அம்மா அணிக் கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. இறுதியாக தினகரனின் நியமனம் சட்டவிரோதமானது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து மறைந்த ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தான் தினகரன் என குறிப்பிடப்பட்டுள்ளது. தினகரனின் நியமனம் அ.தி.மு.க. சட்டவிதிகளுக்கு விரோதமானது என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், தினகரன் அ.தி.மு.க. பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைக்கு எந்த மதிப்பும் இல்லை. அவை செல்லாத ஒன்று என அத்தீர்மானத்தில் அதிரடியாக கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அ.தி.மு.க.வினர் நிராகரிக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதாவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழிநடத்துவர் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Most Read