இந்தியா
Typography

நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இறுதியிலும், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், மீண்டும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

ரஜினிகாந்த் கடந்த ஜூன் மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு பதில் அளித்து அவர் பேசும்போது நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது. ஒருவேளை அரசியலில் ஈடுபட நேர்ந்தால் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் இருப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார்.

நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லாமல் இருக்கிறது. போருக்கு தயாராக இருங்கள் என்றும் அறைகூவல் விடுத்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது குறித்து நெருங்கிய நண்பர்கள், நடிகர்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்டு தற்போது ஒரு முடிவுக்கு அவர் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அரசியலுக்கு வரும் முடிவில் ரஜினிகாந்த் இருக்கிறார். நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்றார்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை முடித்துவிட்டு தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மும்பையில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வரும் காலா படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்று நடித்து வருகிறார். அடுத்த மாதத்துக்குள் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

அடுத்த மாதம் இறுதியிலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திலும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விடுபட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

அப்போது அரசியல் பிரவேசம் குறித்த தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வருகிற 20-ந் தேதி திருச்சியில் கூட்டம் நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள். ரஜினிகாந்த் ரசிகர்களின் மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெறும் என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்