இந்தியா
Typography

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர். இவரது பதவிக் காலம் இந்த மாதம் 27ஆம் தேதியோடு முடிவடைகின்றது. இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் கடந்த மாதம் ஈடுபட்டது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தற்போது அந்த பதவியில் இருக்கும் தலைமை நீதிபதியிடம் மத்திய சட்ட அமைச்சகம் கருத்து கேட்பது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 26ஆம் தேதி தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கெஹரிடம் சட்ட அமைச்சகம் கருத்து கேட்டது. அதில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தீபக் மிஸ்ராவின் (63) பெயரை அவர் பரிந்துரை செய்தார்.

இதை பரிசீலித்த மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், “உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கெஹர் வரும் 27ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். அதனால் அவருக்கு அடுத்தபடியாக தற்போது மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா அடுத்த புதிய தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முடிவடைகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்